இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் கையிலும் எலக்ட்ரானிக் கேட்ஜட்டுகள் வந்து விட்டன, இதன் கூடவே கண்கள் சோர்வு (Eye Strain) வந்துவிட்டது.. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாய் கொரோனா தாக்குதலுக்கு பிறகு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு அடிமையாகிவிட்டார்கள். மொபைல் ஃபோன், லேப் டாப், ஐ பேட் என வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து கேட்ஜட்களும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
அதில் முதன்மை வகிப்பது மொபைல் போன்கள் தான். என்னதான் உலகை ஒரு சிறு பெட்டிக்குள் அவை இணைத்தாலும், அதற்கான பின் விளைவுகளையும் நாம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. அதுவும் முக்கியமாக இவை பாதிப்பை ஏற்படுத்தும் நம் உடலின் பகுதி என்றால் அவை கண்கள்தான்.
உலகத்தில் எங்கோ ஓர் மூலையில் நடப்பதை உடனடியாக பார்க்க முடியாத விஷயங்களை கூட நம்மை பார்க்க வைக்கும் இந்த எலக்ட்ரானிக் டிவைஸ்களால் நாளடைவில் நம்மை நிரந்தரமாக பார்வையே இல்லாமல் கூட செய்ய முடியும்.
மன அழுத்தம், இரத்த அழுத்தம் பற்றியெல்லாம் கேள்விபட்டிருக்கும் நம்மில் எத்தனை பேருக்கு கண்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறித்து தெரியும்? நம்மை பொறுத்தவரை கண்கள் தெரிந்தால் போதும், ஆனால் அதை முறையாக பராமரிக்கிறோமா என்றால் மில்லியன் டாலர் கேள்வி தான். இந்த கட்டுரையில் Eye Strain என்ற கண்களில் ஏற்படும் அழுத்தம் குறித்துதான் பார்க்க போகிறோம். கேட்ஜட் சாதனங்களை தவிர்க்க முடியாது ஆனால் அதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
கண்களின் செயல்பாடு எப்படி இருக்கும்?
எல்லாவற்றையும் பார்க்க தெரிந்து கொள்ள நாம் முதலில் பயன்படுத்துவது கண்களைத் தான். நார்மலாக ஒரு நிமிடத்திற்கு 16 முதல் 20 முறை வரை கண் இமைகள் மூடி திறக்கும். அதுவே ஒரு புத்தகம் படிக்கும்போதோ அல்லது டிவி, மொபைல் பார்க்கும்போதோ ஒரு நிமிடத்திற்கு ஒன்றிலிருந்து இரண்டு முறைதான் அவை திறந்து மூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஏன் கண்களை அடிக்கடி மூடி திறக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். இப்படி கண்களை மூடி திறக்கும் போது இமைகளில் இருக்கும் திரவம் கண்கள் முழுக்க பரப்பும். இது ஏன் முக்கியம் தெரியுமா?
நமது இமைகளை தாண்டி முதலில் கண்ணில் இருக்கும் வெள்ளை பகுதியை Sclera என்று கூறுவோம். கருப்பு அல்லது ப்ரௌன் நிறத்தில் இருப்பது Lens லென்ஸ். இதை தாண்டி பின்னால் இருப்பது Retina ரெட்டினா. cornea கார்னியா போன்ற உறுப்புகள் இப்படி கண்ணுக்குள் பல்வேறு கிளை உறுப்புகள் இயங்கி கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்தால் தான் நமக்கு பார்வை திறன் கிடைக்கும். இந்த பகுதிகளை வறண்டு போகாமல் பார்த்துக் கொள்வது தான் கண்ணீர் என்று சொல்லக் கூடிய திரவம்.
இந்த திரவம் சரியாக உற்பத்தியாகி முறையாக வேலை செய்ய வேண்டும் என்றால் கண் இமைகள் இயல்பாக மூடி திறக்க வேண்டும். அப்படி நடக்காமல் இருக்கும் போது கண்ணீர் உற்பத்தி குறைந்து கண் உறுப்புகள் வறண்டு போகின்றன. இதையே Dry Eyes பிரச்சினை என்று கூறுகிறோம்.
இந்நிலையில் கண் சிமிட்டுவது குறைந்து கண்கள் வறண்டு கண்ணீர் திரவம் குறைவாக இருக்கும். இதற்கு முதல் காரணமாக இருப்பது அதிக எலக்ட்ரானிக் கேட்ஜட் பயன்பாடுதான். இதை தடுக்கவே 20-20-20 என்னும் விதி ஒன்று உள்ளது. இந்த 20-202-20 என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். இதன் மூலம் கேட்ஜட் சாதனங்களிலிருந்து கண்களை பாதுகாக்க முடியும்.
20 -20-20 விதி என்றால் என்ன!
தற்போதைய காலக்கட்டத்தில் எலக்ட்ரானிக் கேட்ஜட்டுகளையும் நம்மையும் பிரிக்க முடியாது என்ற சூழல் வந்து விட்டது. பணிகளுக்கு துவங்கி படிப்பதற்கு வரை அவைதான். எனவே உங்கள் பார்வையை பாதிக்காத வகையில் எப்படி அவற்றை பயன்படுத்துவது என்பதை நாம் பின்பற்ற வேண்டும்.
அதற்கு ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு முறை உங்கள் டிவைஸிலிருந்து கண்ணை திசைதிருப்பி 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை 20 நொடிகளுக்கு பாருங்கள். இப்படி தொடர்ந்து செய்வது கண்களை பாதுகாக்கும் குறிப்பாக கண்கள் உலர்ந்து போகாமல் தடுக்கும்.
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 15 நிமிடத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இரே இடத்தில் உட்கார கூடாது. கண்களுக்கு அதிக பணி கொடுக்க கூடாது. அதற்கு போதுமான இந்த இடைவெளி தேவை. நீங்கள் பயன்படுத்தும் அறையில் நல்ல வெளிச்சம் நிறைந்த மின்விளக்குகளை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கண்கள் சிரமமின்றி பார்க்க அல்லது படிக்க வேண்டியவற்றை பார்த்து கொள்ளும்.
உங்கள் டிவைஸின் ஸ்கிரீனை ஒரு கை அளவு தூரத்தில் எப்போதும் வைத்துக் கொள்ளவும். அதே போல் உங்கள் கண்பார்வைக்கு 10 டிகிரி கீழே உங்கள் ஸ்கிரீன் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அதே போல் ஸ்கிரீன் வழியாக படிக்கும் போது எழுத்துக்களை நல்ல பெரிய எழுத்துருக்களில் படிக்கவும்.
குறுகிய வடிவ எழுத்துக்கள் கண்களுக்கு படிக்க சிரமத்தை ஏற்படுத்தும். எனவே ஸ்கிரீனை பெரிது(Zoom) படுத்தி பயன்படுத்தவும். மேலும் நீங்கள் அமர்ந்திருக்கும் வடிவம் சௌகரியமானதாக இருந்தால் மட்டும் கழுத்து, இடுப்பு, கண்களுக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும். அமரும் போதே சரியான இடத்தில் அமருங்கள்.
கண்கள் சோர்வில் (Eye Strain) இருந்து விடுபட சிறந்த வழிகள்!
கண்களுக்கான உடற்பயிற்சி
நீங்கள் இந்த 20 நிமிட இடைவெளி எடுக்கும்போதே உங்கள் கண்களை (Eye balls) மேலே கீழே மற்றும் இதர திசைகளில் உருட்டி ஒரு கண்களுக்கான உடற்பயிற்சி போல் செய்து கொள்ளலாம்.
உட்கார்ந்த நிலையில் இதை செய்யலாம். எளிதான முறையில் இதை தொடர்ந்து செய்யலாம்.
வறண்ட கண்களுக்கான மருந்துகள்…
அதிகமாக எலக்ட்ரானிக் டிவைஸ்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய நபராக நீங்கள் இருந்தால் கண்கள் வறண்டு போக அதிக வாய்ப்புகள் உண்டு. இதற்காகவே கண் மருத்துவர்கள் ophthalmologist அல்லது optometrist சில கண் மருந்துகளை(Eye drops) பரிந்துரைப்பார்கள். அதை வாங்கி நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இது எந்த பக்கவிளைவுகளையும் உண்டு செய்யாது. அதனால் அச்சமில்லாமல் பயன்படுத்தலாம்.
கண் பரிசோதனை..
குழந்தைகளும் அதிகமாக மொபைல் ஃபோனை பயன்படுத்த தொடங்கிவிட்டதால் அனைவருமே ஆறுமாதத்திற்கு ஒரு முறை அல்லது குறைந்தபட்சம் வருடத்தில் ஒரு முறையாவது கண் மருத்துவரை அணுகி கண்களை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் உங்கள் கண்களில் சிறிதாக பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டிருந்தால் கூட அது தீவிரமடைவதற்குள் கண்டறிந்து சிகிச்சை பெற முடியும். தேவையெனில் கண்ணாடி அணியவும் உதவும்.
கான்டாக்ட் லென்ஸ் (Contact Lens)
நீங்கள் கண்ணாடிக்கு மாற்றாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் நபராக இருந்தால் வாரத்தில் ஓரிரண்டு முறையாவது அதற்கு பதிலாக நார்மல் கண்ணாடிகளை பயன்படுத்துங்கள். வெளியில் செல்லும் போது கூலர்ஸ் பயன்படுத்துங்கள்.
குறிப்பாக UV கதிர்களில் இருந்து பாதுகாக்கும் கூலர்ஸ் கண்ணாடிகளை பயன்படுத்துவது நல்லது. அதே போல் உங்கள் டிவைஸ்களில் கூட கண்களை பாதிக்காத வண்ணம் பாதுகாப்பதற்காக ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி உங்கள் கண்களை பாதுகாத்து கொள்ளலாம்.
முக்கியமாக உங்கள் கண்களை பாதிக்காத அடிப்படை ஸ்கிரீன் சைஸான 25 இன்ச்சில் நீங்கள் பயன்படுத்தும் ஸ்கிரீன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது கண்களை ஸ்ட்ரெய்ன் இல்லாமல் பார்த்துகொள்ளும்.
கண் நலனிற்கான டயட் உணவுகள்..
நமது மொத்த உடலுக்கும் எப்படி ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 45 நிமிட உடற்பயிற்சி அவசியமோ அதேபோல நல்ல ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் அவசியம். அதிகமான காய்கள் மற்றும் பழங்களை உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக நாம் ஏற்கனவே கேள்வி பட்டது போல் கேரட்ஸ், ஆரஞ்ச் , நட்ஸ், கீரைகள், ஊட்டச்சத்தான விதைகள் ஆகியவற்றை சாப்பிடுங்கள். எனவே, உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவு மற்றும் சரியான உடல் எடையை பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் போன்று கண்களும் நலமாக இருக்கும்.
புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்..
சிகரெட்டில் காணப்படும் நிக்கோட்டின் உங்கள் கண் நரம்புகள், ரெட்டினாவை பாதிக்க செய்யலாம். டயாபடிஸ் கண்பாதிப்புகளை உண்டு செய்யலாம். கிளைகோமா உண்டு செய்யலாம். கண் புரை கூட உண்டு செய்யலாம். புகைப்பிடிப்பது உங்கள் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, புகை பிடிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இது கண்களை மட்டும் அல்ல உடல் உறுப்புகளை அதிகமாக பாதிக்கும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
கண்களை கசக்காதீர்கள்…
பெரும்பாலும் பலரும் கண்களில் சிறிதாக தூசு விழுந்தாலோ அல்லது ஏதாவது உறுத்தினாலோ உடனை கண்களை கசக்க ஆரம்பித்து விடுகின்றனர். அப்படி செய்யவே கூடாது. ஏனெனில் உங்கள் கண் உறுப்புகளை பாதுகாத்து வரும் கார்னியா லேயர் இதனால் பாதிக்கப்பட்டு இதனால் கூட உங்கள் பார்வை திறன் பாதிக்கப்படலாம். அப்படி ஏதேனும் தூசு போன்று விழுந்தால் கண்களை சுத்தமான நீரில் கழுவி விடுங்கள்.
இன்றைய நிலையில் இவை மிக மிக முக்கியமானவை.