பல்வலி என்பது யானை காதில் எறும்பு புகுந்த கதைதான். நம்மை எந்த வேலையும் செய்ய விடாமல் தலை முதல் பாதம் வரை குடைந்து கொண்டே இருக்கும். இது அந்த வலியை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அப்படிப்பட்ட பல் வலி எதனால் வருகிறது? எப்படி பல் வலி வராமல் தடுப்பது? (Tips for Toothache in Tamil) பல் வலிக்கு என்னென்ன சிகிச்சைகள் உள்ளன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பல் என்றால் என்ன?
பற்களை பொறுத்தவரை மேலே உள்ள தலை பகுதியை சுத்தமாக வைத்து கொண்டால் மட்டும் போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது பல் கட்டுமானத்தில் சிறு பகுதி மட்டுமே.
அதை தாண்டி பற்கள் மூன்று பகுதிகளாக உள்ளன. முதல் பாகம் நாம் வெளியே பார்க்கக்கூடிய (Crown) என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது பகுதி (enamel), மூன்றாவது ஈறுகளுக்கு கீழே இருக்கும் வேர்ப்பகுதி (Roots) ஆகியவைதான். இந்த மூன்றும் இணைந்தது தான் ஒரு முழு பல்லின் கட்டுமானம்.
![பல் வலியில் இருந்து விடுபட எளிய வழிகள்! 2 Teeth Anatomy](https://www.jammiscans.in/wp-content/uploads/2023/04/Teeth-Anatomy.jpg)
இதில் முதல் பாகத்தில்தான் நமது உடலின் உறுதியான பகுதி இருக்கிறது. அதை நாம் எனாமல் (Enamel) என்று அழைக்கிறோம். கடினமானதையும் கடித்து உண்ண உதவும் பகுதிதான் இது.
அடுத்து இருக்கும் லேயர் டென்டின் (Dentin) என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் மிகச்சிறியதாக லேயர்கள் உள்ளது.
உங்களின் எனாமல் தேய தேய நீங்கள் சாப்பிடும் சூடான அல்லது குளிர்ந்த பொருட்கள் இந்த டென்டின் மீது பட்டு உங்கள் பற்களை அதிக உணர்திறன் (Sensitive) மிக்கதாக மாற்றி விடும்.
அதனால் தான் பல்கூச்சம் உணர்கிறோம். அதற்கும் உள்ளே ரத்தக்குழாய்களால் சூழப்பட்ட பல்ப் சேம்பர் (Pulp Chamber) என்ற பகுதி இருக்கும். இது முழுக்க ரத்தக்குழாய்களால் ஆனது. அதற்கு கீழ் பிரவுன் நிறத்தில் சிமெண்ட் போன்று இருக்கும்.
ஈறுகளுக்கு கீழே பற்களுக்கு வெளியே தாடை எலும்புகளையும், பற்களின் வேர்பகுதிகளையும் இணைக்கும் இடம்தான் சிமண்டம் என்று சொல்லக் கூடிய பகுதி இருக்கிறது. இதுதான் உங்கள் பற்களை உறுதியாக பிடித்து வைத்து கொள்கிறது.
இதற்கும் கீழே ரத்த குழாய்களால் நிறைந்த வேர்க்கால்வாய் (Root Canal) இருக்கிறது. அதே போல் மஞ்சள் நிறத்தில் இருக்க கூடிய நரம்பு இழைகள் உங்களது ஒவ்வொரு பல்லையும் நேரடியாக மூளையோடு இணைக்கிறது.
இதைத்தாண்டி வெளியே இருக்கும் தாடை எலும்புகளில்தான் ஒவ்வொரு பல்லும் இணைக்கப்பட்டுள்ளது. இதை இணைக்கும் மேல்பகுதிதான் Periodontal Ligament என்ற பகுதி.
அதற்கும் மேல் உங்கள் கண்களுக்கு பிங்க் நிறத்தில் தெரிவதுதான் ஈறுகள். இதுதான் பற்களின் அழகான கட்டமைப்பு. இவ்வளவு அழகான பற்களில் எதனால் வலி ஏற்படுகிறது என்பதை அடுத்து பார்ப்போம்.
பல்வலி ஏற்பட காரணம்?
பற்கள் தான் உணவை மெல்லுவதற்கும், பேசுவதற்கும் முக்கியமாக உதவுகிறது. இந்நிலையில் பற்களில் ஏற்படும் வலி, பல் கூச்சம், இதர அசௌகரியமான உணர்வுகளுக்கு நிறைய காரணம் உள்ளது.
![பல் வலியில் இருந்து விடுபட எளிய வழிகள்! 3 reasons for toothache](https://www.jammiscans.in/wp-content/uploads/2023/04/reasons-for-toothache-1024x807.jpg)
முதலில் நாம் அதிகம் கேள்விப்பட்ட கேவிட்டிஸ் (Cavities) சிறு குழந்தைகளில் துவங்கி பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரும். இதை மருத்துவ துறையில் Caries என்று அழைக்கப்படுகிறது.
உங்கள் பற்களுக்கு அடியில் இருக்கும் மூளைக்கு போகும் நரம்பு இழைகள்தான் பல் உணரும் உணர்ச்சிகளை மூளைக்கு எடுத்து சென்று உடனடியாக பிரதிபலிக்கும்.
ஆரோக்கியமற்ற முறையில் பற்களை பராமரிக்காமல், அதிகமாக சர்க்கரை தன்மையுள்ள உணவுகளை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு கொண்டே இருந்தால் உங்கள் பற்களின் நிறம் மாறும்.
அங்கு Plaque பிரச்சனை உருவாக துவங்கிவிடும். பெரும்பாலும் அதிகமாக இனிப்புத் தன்மையுள்ள உணவை தின்று விட்டு சரியாக ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் தேய்க்காமல், பற்களை பராமரிக்காமல் இருந்தால் இந்த Plaque என்ற சிறு லைன் பெரிதாகி வேர்ப்பகுதி வரை சென்றுவிடும்.
அதற்கு பிறகும் அதை கண்டுகொள்ளாமல் இருந்தால் அது பாக்டீரியாக்கள் மற்றும் கெமிக்கல்களோடு கலந்து சொத்தைப்பல்லை (Tooth Decay) உருவாக்கிவிடும். இதுவும் சிறிதாக துவங்கி பெரியதாக மாறிவிடும்.
அப்படியே ஒரு பல்லோடு நிற்காமல் அடுத்தடுத்த பற்களுக்கும் பரவி கொண்டே இருக்கும். இதே நேரத்தில் ஈறுகளும் தொற்றுக்கு உள்ளாகி Gingivitis என்று சொல்லக்கூடிய ஈறுகளில் தொற்று அல்லது ஈறுவீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.
அதே போல், பற்களை இணைக்கும் பகுதிகளும் தொற்றுக்கு உள்ளாகலாம். அதை நாம் Periodontitis என்று அழைக்கிறோம்.
இப்படி இவ்வளவு பிரச்சனைகள் ஆகும்போதுதான் நமது பற்களுக்கு கீழ் இருக்கும் நரம்பு இழைகள் அந்த வலியை உடனடியாக மூளைக்கு தெரிவித்து நமது பற்களில் பிரதிபலிக்கும். அது நமக்கு தாங்க முடியாத வலியை தருகிறது.
விஸ்டம் டூத் (Wisdom Tooth)
நமது பல்வரிசையில் கடைசியில் இருக்கும் பல்தான் இந்த விஸ்டம் டூத். மேற்சொன்ன காரணங்களை தாண்டி பல்வலி (Tips for Toothache) ஏற்பட இந்த பல்லும் முக்கிய பங்காற்றுகிறது.
பொதுவாகவே இந்த பல் மறைந்து சிறியதாக காணப்படும். காலப்போக்கில் வளர்ந்து விடும். ஆனால், இந்த வளர்ச்சி சரியான முறையில் நடைபெறாமல் இருந்தால்தான் பிரச்சனையே தொடங்கும். இதை நான்கு வகைகளாக பிரிக்கலாம்.
![பல் வலியில் இருந்து விடுபட எளிய வழிகள்! 4 wisdom toothache](https://www.jammiscans.in/wp-content/uploads/2023/04/wisdom-toothache-1024x807.jpg)
- முதலில் மீசியல் (Mesial) என்பது பல் உள்ளயே முன்னோக்கி நீட்டிக்கொண்டு இருப்பது.
- இரண்டாவது டிஸ்டல் (Distal) என்பது பின்னோக்கி நீட்டிக்கொண்டிருப்பது.
- மூன்றாவது வெர்ட்டிக்கல் (Vertical) என்பது அந்த பல் வளர்ச்சி அடையாமல் உள்ளேயே நீட்டிக்கொண்டு அருகில் உள்ள பல்லையும் பாதித்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
- நான்காவதாக ஹாரிசோன்டல் (Horizontal) என்பது வளர்ச்சியே அடையாமல் உள்ளேயே படுத்து கொண்டிருக்கும் வடிவில் அமைந்திருப்பது. இது உங்கள் அருகமை பற்களையும் அழுத்தி வலியை ஏற்படுத்தும்.
இதைத்தான் மருத்துவர்கள் Wisdom Tooth Impact என்று அழைக்கிறார்கள். இது பாதி வளர்ந்து பாதி ஈறு மேலே இருப்பதால் மேல்வரிசையில் உள்ள பல் செயல்பாட்டில் ஈடுபடும் போது அந்த ஈறுகளில் பட்டு வலி தருகிறது.
அதே போல் இதன் முறையற்ற வடிவம் மற்றும் அமைவால் இது மற்ற பற்களை தள்ளி அதன் நரம்பு இழைகள் வழியாக வலியை உண்டாக்குகிறது.
பல்வலிக்கு மருத்துவர் சிகிச்சை! (Tips for Toothache in Tamil)
நீங்கள் சொத்தைப்பல் வருவதற்கு முன்பே மருத்துவரை பார்த்துவிட்டால் முதலில் உங்களுக்கு ஸ்கேலிங் (Scaling) என்று சொல்லக்கூடிய கிளீனிங் செய்வார்கள். இதில் உங்களது பற்களில் உள்ள Plaque போன்றவற்றை கிளீன் செய்து எடுத்துவிடுவார்கள்.
சொத்தை பல்லோடு செல்பவர்களுக்கு ஸ்கேலிங் முடித்தவுடன், லோக்கல் அனெஸ்தீஸியா கொடுத்துவிட்டு பல்லில் இருக்கக்கூடிய சொத்தையை கிளீன் செய்து மொத்தமாக எடுத்து விடுவார்கள்.
![பல் வலியில் இருந்து விடுபட எளிய வழிகள்! 5 Tips for Toothache in Tamil](https://www.jammiscans.in/wp-content/uploads/2023/04/Dental-treatment-1024x620.jpg)
அதன் பின்பு சிமண்டம் போன்றவற்றை வைத்து அந்த பல்லில் சொத்தையால் ஏற்பட்ட பல் ஓட்டையை அடைத்து விடுவார்கள்.
அதையும் தாண்டி நிலை தீவிரமாக இருந்து, தொற்று வேர்ப்பகுதி வரை பரவியிருந்தால் பல்லின் மேற்பகுதியை கிரைண்ட் செய்து எடுத்து விட்டு பல் போலவே இருக்கும் கேப் அல்லது கிரௌன் என்பதை பொறுத்துவார்கள்.
இதையெல்லாம் தாண்டியும் சரி செய்யமுடியாத நபர்களுக்கு மட்டுமே அடுத்தகட்ட சிகிச்சைகள் தரப்படும்.
ரூட் கெனால் (Root Canal)
உங்களின் பற்கள் மேல் முதல் அடி வரையிலும் ரத்தக்குழாய்கள் உட்பட தொற்றுக்கு உள்ளாகியிருந்தால் உங்களின் Endodontist மருத்துவர் ரூட் கெனால் செய்ய பரிந்துரைப்பார்.
இந்த முறையில் லோக்கல் அனெஸ்தீஸியா கொடுத்து பல்லை மரத்து போக செய்து விடுவார்கள். பின்னர் பல்லின் ஆழம் வரை ட்ரில் செய்துவிட்டு தொற்று பரவியிருக்கும் ரத்தக்குழாய்கள் உட்பட அனைத்தையும் வெளியே எடுத்து விடுவார்கள்.
பிறகு மீண்டும் பல்லை வடிவாக ட்ரில் செய்து Gutta Percha என்ற பொருளை கொண்டு காலி இடத்தில நிரப்பி விடுவார்கள். பின் மேலே காலியாக இருக்கும் தலைப்பகுதியில் filling செய்யப்படும். தற்போது முழுமையாக நார்மல் பல் போன்றே மாறி விடும்.
உணர்வுத்திறன் மிக்க நரம்பு இழைகளை வெளியே எடுத்துவிட்டதால் இந்த பல்லில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் நீண்ட காலத்திற்கு வராது.
பல்மாற்று சிகிச்சை (Tooth Implantation)
![பல் வலியில் இருந்து விடுபட எளிய வழிகள்! 6 Tooth Decay Stages](https://www.jammiscans.in/wp-content/uploads/2023/04/Tooth-Decay-Stages-1024x620.jpg)
எதற்கும் தகுதியில்லாத சரி செய்ய முடியாத நிலையில் இருக்கும் பல்லை கண்டிப்பாக நீக்கி விடலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்காக முதலில் லோக்கல் அனெஸ்தீஸியா மூலம் பல்லை மரத்து போக செய்துவிடுவார்கள்.
பின்னர் அந்த பல்லை ட்ரில் செய்து நீக்கிவிடுவார்கள். தற்போது காலியாக இருக்கும் அந்த இடத்தில் பல்மாற்று சிகிச்சை செய்யப்படும்.
இதற்காக எலும்பு பகுதிவரை ட்ரில் செய்து ஸ்க்ரூ ஒன்று பொறுத்தப்படும். இதுவே உங்களின் செயற்கை பல்லை உறுதியாக பிடித்து வைத்து கொள்ளும். அதன் மீது செயற்கை பல்லை பொறுத்தி ஸ்க்ரூவை இறுக்கி விடுவார்கள்.
இந்த பல்லும் உங்களுக்கு நீண்ட காலத்திற்கு பிரச்சனை இல்லாமல் உழைக்கும்.
வருமுன் காப்பது எப்படி?
பற்களில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்வது, வலிக்குதே என்று யோசிக்கும் நாம் இந்த பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் கூட தடுக்க முடியும் என்று யோசிப்பதில்லை. அதற்கும் பல எளிமையான வழிகள் உண்டு.
நாளுக்கு இருமுறை உப்புநீரில் நீங்கள் வாய் கொப்புளிக்கும் போது பற்களில் இருக்கும் பாக்டீரியா உட்பட அனைத்து தீய சக்திகளும் வெளியேறி விடும். நாளுக்கு இருமுறை பல் தேய்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
அதுவும் முக்கியமாக இரவு நேரங்களில் பல் தேய்க்க வேண்டும். காரணம், இரவு நேரங்களில்தான் நமது வாய் எந்தவித அசைவும் இல்லாமல் இருக்கிறது. அது போன்ற நேரத்தில் பாக்டீரியாக்கள் வளர சரியான சந்தர்ப்பம். எனவே, இரவு நேர பல் தேய்க்கும் பழக்கம் இதை தடுக்கும்.
வருடத்திற்கு இருமுறையாவது பல்மருத்துவரை அணுகி உங்களது பற்களை சோதனை செய்து கொள்ளுங்கள். பற்கள் வரிசையாக இல்லாமல் ஒரே இடத்தில் குவிந்து குவிந்து இருந்தால் உணவுகள் போய் சிக்கிக்கொண்டு பிரச்சனையாக மாறலாம்.
எனவே, உங்கள் மருத்துவர் பரிந்துரையோடு Tooth Braces பயன்படுத்தி அதை சரி செய்து கொள்ளலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
பல்வலிக்கு தவிர்க்க வேண்டியவை!
எந்த வகையிலான டொபாக்கோ பொருட்களையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக புகைபிடித்தல், பான், குட்கா பயன்படுத்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது வாய் சுகாதாரத்தை பாதுகாக்கும்.
மேலும் கர்ப்ப கால தகவலை இங்கு தெரிந்து கொள்ளலாம்: