ஒரு பெண் கருவுறுதல் என்பதே கணக்கிலங்கடாத மகிழ்ச்சி தான். கருவுற்ற நாள் முதல் பிரசவம் குறித்த எண்ணங்கள் தான் நினைவில் இருக்கும். சுகப்பிரசவமாகுமா (Tips For Normal Delivery in Tamil) அல்லது சிசேரியன் பிரசவமா என்றெல்லாம் மனம் முழுக்க ஒருவித அச்சம் இருக்கும்.
கர்ப்பகாலம் முழுக்க எடுத்துகொள்ளும் உணவுகளும், வாழ்க்கை முறையும், மன ஆரோக்கியமும் தான் பெண்ணின் பிரசவத்தை பெரும்பாலும் தீர்மானிக்கின்றன. அதே நேரம் பிரசவ நேரத்தில் எதிர்பாராமல் உண்டாகும் சிக்கல்களும் சிசேரியன் பிரசவத்துக்கு காரணமாகின்றன. இவையெல்லாம் தாண்டி சில பெண்களே பிரசவ வலிக்கு பயந்து சிசேரியனை ஊக்குவிப்பதும் உண்டு.
ஒரு பெண் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை கொண்டிருந்தால் நிச்சயம் சுகப்பிரசவத்தை தான் விரும்புவார்கள். அப்படி விரும்பும் பெண்களுக்கு இந்த குறிப்புகள் நிச்சயம் உதவும்.
கருவுற்ற உடன் மருத்துவர் ஆலோசனை அவசியம்!
கருவுற்றதை உறுதி செய்ததும் உங்களுக்கான மருத்துவரை தேர்வு செய்வதில் அக்கறை செலுத்துங்கள். பிறகு மருத்துவரை அணுகி கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், வாழ்க்கை முறை குறித்து தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
கூடவே உரிய பரிசோதனை குறித்த தகவல்களையும் அறிந்துகொள்ள வேண்டும். பரிசோதனைகளை அவசியம் தவிர்க்காமல் உரிய இடைவேளையில் செய்து கொள்ள வேண்டும். நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற கர்ப்பகால நோய்கள் வராமல் தடுக்கவும் வந்தால் அதை கட்டுக்குள் வைக்கவும் அவசியம்.
வைட்டமின் பற்றாக்குறை
கர்ப்ப காலத்தில் கருவின் வளர்ச்சியை உறுதி செய்து கொள்ள தேவையான வைட்டமின்கள் குறித்து மருத்துவர் பரிந்துரைப்பார். சில வைட்டமின்கள் குறைவாக இருக்கும்பட்சத்தில் உணவு முறையும் உடன் மாத்திரைகளும் பரிந்துரைப்பார்கள். இதை எக்காரணமும் கொண்டு அலட்சியம் செய்யகூடாது.
வைட்டமின் பற்றாக்குறை கரு வளர்ச்சியை பாதிப்பதோடு குறைபிரசவத்தையும் தூண்டிவிடும். அதனால் கர்ப்பகாலம் முழுவதுமே கரு வளர்ச்சி சீராக இருக்க வைட்டமின் குறைபாடில்லாமல் பார்த்துகொள்வது அவசியம்.
உணவில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும்?
உணவு முறையை பொருத்தவரை மருத்துவரின் ஆலோசனையோடு வீட்டில் இருக்கும் மூத்த தலைமுறையினரின் அனுபவங்களையும் கேட்க தவறாதீர்கள்.
கருவளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பழங்கள், காய்கறீகள், கீரைகள், உலர் கொட்டைகள், விதைகள், திரவ ஆகாரம், முளைகட்டிய தானியங்கள், சுண்டல் வகைகள், அசைவம் சாப்பிடுபவர்கள் மீன் , முட்டை, மெலிந்த கோழி இறைச்சி என்று திட்டமிட்டு தவறாமல் எடுத்துகொண்டால் கருவளர்ச்சி சீராக இருக்கும். ஆரோக்கியமாக இருக்கும்.
இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
அதே நேரம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகளை எக்காரணம் கொண்டு எடுத்துகொள்ள வேண்டாம். கர்ப்பகாலத்தின் மூன்று ட்ரைமெஸ்டர்களிலும் திட்டமிட்டு சேர்க்க கர்ப்ப காலத்தில் வேண்டிய உணவு வகைகள் எடுத்துகொள்வது நல்லது. மிக முக்கியமாக உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்
உடல் எடை கட்டுப்பாடு கவனம் அவசியம்
கர்ப்பகாலத்தில் குறிப்பாக இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலத்துக்கு பிறகு கருவின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பிணியின் உடல் எடையும் அதிகரிக்க கூடும். இது இயல்பானது. மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் கர்ப்பிணியின் உயரம் வயது இரண்டையும் கணக்கில் கொண்டு கர்ப்பகாலத்தில் அதிகரிக்க வேண்டிய உடல் எடையை மருத்துவர் அறிவுறுத்துவார்.
அதை அதிக கவனத்தோடு கடைப்பிடிப்பது அவசியம். ஏனெனில் கர்ப்பிணியின் உடல் எடை மற்றும் சிசுவின் எடை இரண்டுமே அதிகரிக்கும் போது சுகப்பிரசவம் ஆவதற்கான வாய்ப்பு குறைபடகூடும். அதனால் சரியான முறையில் உடல் எடை அளவாக அதிகரிக்க வேண்டும்.
உடற்பயிற்சி கவனம் அவசியம்!
கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் போதுமான சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்வது சிரமமாக இருக்கும். வாந்தி, ஒவ்வாமை, குமட்டல் இருப்பதால் கர்ப்பகால உடல் சோர்வு இருக்கவே செய்யும். ஆனால் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று நினைக்காமல் இயன்றளவு உடலுக்கு வேலை கொடுப்பது நல்லது. உடலை வறுத்தும் பயிற்சிகள் இல்லாமல் மிதமான நடைபயிற்சியை கருவுற்ற நாள் முதல் பிரசவக்காலம் வரை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
நடைபயிற்சி நெஞ்செரிச்சல் பிரச்சனையை குறைக்க செய்யும். ஜீரணத்தை அதிகரிக்க கூடும்.கால்களில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தும். தசைகளுக்கு வலிமை கொடுக்கும். உங்கள் உடல் ஒத்துழைத்தால் நீங்கள் யோகா, வேறு மிதமான உடற்பயிற்சிகளும் செய்யலாம்.
இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் தாம்பத்தியம் மேற்கொள்ளலாமா?
ஆழ்ந்த தூக்கம்
தூக்கமின்மை என்பது கர்ப்பகாலத்தில் இயல்பான ஒன்று. மன அழுத்தம், பதட்டம் போன்றவை தாண்டி குழந்தையின் அசைவும் சேர்ந்து தூக்கமின்மையை உண்டாக்கிவிடும். தினமும் இரவில் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். இரவில் தூக்க நேரம் குறைந்தால் பகலில் அதை ஈடு செய்ய சில மணி நேர தூக்கம் அவசியம்.
இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே உணவை முடித்துவிட வேண்டும். தூங்குவதற்கு முன்பு மிதமான வெந்நீர் குளியல் எடுத்துகொள்வது தசைகளுக்கு இதமாக இருக்கும். படுக்கும் முன்பு ஒரு டம்ளர் பால் இலேசான சூட்டில் குடிப்பது தூக்கத்தை மேம்படுத்த உதவும்.
கட்டிலில் படுத்தாலும் கீழே படுத்தாலும் படுக்கை அசெளகரியம் இல்லாமல் இருக்க வேண்டும். படுக்கைக்கு முன்பு செல்ஃபோன், டீவி அனைத்தையும் தவிர்த்து புத்தகங்கள் வாசிக்கலாம். மெல்லிய இசை கேட்கலாம். கர்ப்பகாலம் முழுவதும் இதை கடைப்பிடிக்க வேண்டும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் குறைக்க வேண்டும்
கர்ப்பகாலம் முழுக்க மகிழ்ச்சியாக இருந்தால் குழந்தையின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சுற்றியிருப்பவர்களும் கர்ப்பிணியின் மனதை பாதிக்கும் வகையில் எந்தவிதமான செயலையும் செய்ய கூடாது. மனதில் தேவையில்லாத கவலைகளை தேக்கிவைக்க கூடாது. மனதை இலகுவாக வைத்திருக்க வேண்டும்.
கர்ப்பகாலத்தில் பிரசவ நேரத்தில் கர்ப்பிணிக்கும் சிசுவுக்கும் எந்த விதமான தொந்தரவும் இல்லை என்னும் போது பிரசவமும் சுகமாகவே இருக்கும்.
சரியான உணவு முறை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, தொடர் மருத்துவரின் கண்காணிப்பு போன்றவை உங்கள் பிரசவத்தை சுகப்பிரசவமாக்கிவிடும்.