பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் பிரச்சனை அடி வயிறு வலி தான். பெண்கள் மருத்துவரிடம் செல்லும்போது வயிறு வலி குறிப்பாக அடிக்கடி அடி வயிறு வலி ( frequent stomach pain in tamil) இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். இதனால் தன்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்றும் கூறுவார்கள்.
சில நேரங்களில் அதிகமான அடிவயிற்று வலியால் பெண்கள் அழுவதை கூட பார்த்திருக்கிறோம். அப்படி வயிறு வலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அது பிசியலாஜிக்கல் பிரச்சினையாக கூட இருக்கலாம். குறிப்பிட்ட ஒரு காரணத்தால் தான் அடிவயிறு வலி ஏற்படுகிறது என்று சொல்லிவிட முடியாது.
அப்படியே வலி என்று வந்தாலும் உடனடியாக மாத்திரை எழுதி கொடுத்து அதை சரி செய்துவிடவும் முடியாது. முதலில் வயிறு வலி ஏன் வந்தது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளித்தால் தான் அவை மீண்டும் வராமல் தடுக்க முடியும்.
அடிக்கடி அடி வயிறு வலிக்க காரணங்கள் (Causes for frequent stomach pain in tamil)
மாதவிடாய் கால நடுவில் வரக்கூடிய வலி
பொதுவாக ஒரு பெண் இயல்பான மாதவிடாய் காலங்களில் இருந்தால் இவர்களுக்கு 30, 35 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும் சுழற்சி நேரத்தில் Mid Cycle Pain என்று சொல்லக்கூடிய வலி ஏற்படுகிறது.
இதற்கு காரணம் அந்த கருமுட்டை வளர்ந்து வெடிக்கும் போது மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில் இந்த வலியை அவர்கள் உணர்கிறார்கள். இது முழுக்க முழுக்க இயல்பானது.
அந்த நேரங்களில் உங்களால் வலியை தாங்க முடியவில்லை என்றால் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் வலி மாத்திரை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அது நார்மல் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே சரியாக மாதவிடாய் முடிந்து இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு அருகில் வரக்கூடிய அடி வயிற்று வலியை கண்டு பயப்படத் தேவையில்லை.
பீரியட்ஸ் அல்லாத காலங்களில் வர கூடிய வலி
இரண்டாவதாக பலரும் தனக்கு தொடர்ச்சியாக அடி வயிற்று வலி இருந்து கொண்டே இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். இவர்கள் பீரியட்ஸ் இருந்தாலும் அல்லது அது அல்லாத காலங்களிலும் கூட அடிவயிறு வலி ஓயாமல் இருந்துகொண்டே இருக்கிறது என்றால் கவனிக்க வேண்டும்.
அது போன்ற பிரச்சனைகளுக்கு அவர்களின் எடை சரியான அளவில் இருக்கிறதா? அவர்களின் உடலியல் செயல்பாடுகள் ஆரோக்கியமானதாக இருக்கிறதா? அவர்கள் எடை மற்றும் பிஎம்ஐ சரியாக இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.
கருப்பை பகுதிகள்
மூன்றாவதாக உங்களுக்கு கர்ப்பப்பை, கருமுட்டைப்பை , கருக்குழாய் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் பிரச்சனை உண்டா.
கருப்பையில் கட்டி ஏதேனும் இருக்கிறதா? கருமுட்டைப்பையில் சாக்லேட் சிஸ்ட் உள்ளதா? எண்டொமெட்ரியோசிஸ் அல்லது நீர்க்கட்டி இருக்கிறதா அல்லது கருக்குழாயில் தொற்று உள்ளதா என்று பல விஷயங்கள் இந்த அடி வயிற்று வலிக்கு காரணங்களாக இருக்கலாம்.
இந்நிலையில் இந்த கருப்பை பகுதிகள் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வலி Pre Menstrual Syndrome
மாதவிடாய் வயிறு வலி என்பது பல நிலைகளில் உண்டு. பலருக்கும் மாதவிடாய் துவங்குவதற்கு முன்பே இரண்டு நாட்களுக்கு முன் இருந்தே வயிறு வலிக்க ஆரம்பித்து மாதவிடாய் தொடங்கிய பிறகும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இதை Pre Menstrual Syndrome என்று அழைக்கிறோம். இது போன்ற சமயங்களில் பெண்கள் மருத்துவர்கள் மூலமாக அல்லது தாங்களே கூட ஒரு சில வழிமுறைகளை பின்பற்றி வயிறு வலியை போக்கி கொள்ளலாம்.
அடிவயிற்று வலிக்கு வீட்டு மருத்துவம்
ஹாட் வாட்டர் பேக்
அடி வயிறு அதிகமாக வலிக்கும் போது சூடான நீரை ஹாட் வாட்டர் பேக் அடி வயிற்றில் வைத்து ஒற்றி எடுக்கலாம். இது அடிப்படையாக அடி வயிற்று வலியை வேகமாக குறைக்க உதவும்
மூலிகை தன்மை கொண்ட சமையல் பொருட்கள்
அதில் முக்கியமானவை பட்டை, கிராம்பு, லவங்கம், சீரகம், வெந்தயம், சோம்பு,இஞ்சி போன்றவை. எல்லாமே அதிக மருத்துவ குணங்கள் கொண்டவை. இது வயிற்று வலியை போக்குவதற்கு அடிப்படை நிலையில் உதவும் சமையலறை மூலிகைகள்
இவற்றில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு டீ ஸ்பூன் கலந்து தண்ணீரில் கொதிக்க வைத்து நாள் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக அல்லது மூன்று வேளை குடித்து வந்தாலே வயிறு வலி குறைவதை உணர முடியும்.
அல்லது அனைத்தையும் கலந்து பொடியாக்கி வயிற்று வலி வரும் நேரத்திலோ அல்லது மாதவிடாய் காலங்களிலோ ஒரு ஸ்பூன் இதில் அரைத்து எடுத்துக்கொண்டு சூடான தண்ணீரில் கலந்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு காலை மற்றும் இரவு குடித்தால் 50 முதல் 70 சதவீதம் வரை வயிற்று வலி குறைவதை நீங்கள் பார்க்கலாம்.
இது எப்படி வேலை செய்கிறது
நமக்கு அடி வயிறு வலி ஏற்படும் போது அல்லது எந்த விதமான வலி ஏற்படும் போதும் உடலில் prostaglandins புரோஸ்டோ கிளான்ட்ஸ் என்ற ரசாயனத்தை வெளியிடுகிறோம். இதற்காக வலி மாத்திரை உட்கொள்ளும் போது அது நேரடியாக இந்த ரசாயனத்தை தான் கட்டுப்படுத்தும்.
அதேபோல வெந்தயம் உள்ளிட்ட இதர மூலிகை பொருட்களுக்கு இந்த prostaglandins ரசாயனத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி உண்டு. குறிப்பாக 50 முதல் 70 சதவீதம் வரை அதை சரி செய்யக்கூடிய சக்தி உள்ளது.
இதை தான் நாம் பாட்டி வைத்தியம் என்கிறோம். இவை நிச்சயம் அடி வயிறு வலியை குறைக்க செய்யும். இதன் மூலம் மருந்துகள் இல்லாமல் வயிறு வலியை சரி செய்ய முடியும்.
முடிவுரை
எந்த வீட்டு வைத்தியத்துக்கும் இவை கட்டுப்படவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அனுகவும்.