காலையில் எழுந்தவுடன் தலைவலியோடு எழுந்தால் என்ன ஆகும்? அந்த நாளே ஓடாது, யாரை பார்த்தாலும் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவோம். ஆனால், இந்த தலைவலி வருவதற்கு காரணம் என்ன? (Headache Causes) சாதாரண தலைவலிக்கும் ஒற்றைத்தலைவலிக்கும் (Migraine Headache) என்ன வித்தியாசம், நமக்கு வருவது சாதாரண தலைவலியா அல்லது ஒற்றை தலைவலியா என்று எப்படி தெரிந்துக் கொள்வது என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
முன்னதாக உங்களுக்கு தலைவலி வந்தால் அல்லது மற்றவர்களுக்கு வந்தால் அதன் அறிகுறிகள் எப்படி உள்ளது. குறிப்பாக இந்த 5 கேள்விகளுக்கு நீங்கள் பதிலளியுங்கள். இதன் மூலம் அது எந்த வகையான தலைவலி என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
தலைவலி வரும் போது இந்த அறிகுறிகள் தென்படுகிறதா?
முதலாவதாக தலையின் ஒரு பகுதி அல்லது ஒரு பக்கமாக மட்டும் வலிக்கிறதா? இரண்டாவதாக தலைவலியின் போது மயக்கம், தலை சுற்றுதல், வாந்தி எடுக்கும் உணர்வு, மூக்கடைப்பு ஆகிய அறிகுறிகள் தெரிகிறதா? மூன்றாவதாக தலைவலி மட்டுமின்றி வெளிச்சத்தை பார்க்கும் போது கண்கள் இருட்டுதல் அல்லது கூசுதல், கரும்புள்ளிகள் தெரிதல் போன்ற அறிகுறிகள் தெரிகிறதா? நான்காவதாக சூரிய வெளிச்சம் போன்ற அதிகமான வெளிச்சத்தில் வெளியே செல்லும்போது கண்கள் கூசுகிறதா? ஐந்தாவதாக தலைவலி இருக்கும் போது பேசினால் வாய் குளறுகிறதா?
கர்ப்ப கால தலைவலி பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஐந்து கேள்விக்கும் ஆம் என்பது பதிலாக இருந்தால் கண்டிப்பாக அது சாதாரண தலைவலி கிடையாது. இது நீங்கள் மன அழுத்தத்தோடு இருப்பதாலோ அல்லது பணிச்சுமையாலோ வரும் தலைவலியும் கிடையாது. அப்படியென்றால் இந்த நிலைக்கு பெயர் என்ன? சாதாரண தலைவலிக்கும், ஒற்றைத் தலைவலிக்கும் என்ன வித்தியாசம்? இது வராமல் எப்படி தடுப்பது என்பதை மேலும் பார்ப்போம்.
மூளை பகுதியின் செயல்பாடு
பொதுவாக ஒரு பிரச்சனை குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் அந்த பிரச்சனை ஏற்பட்டுள்ள பகுதியின் நார்மலான செயல்பாடு என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
![தலைவலி வர காரணம், மற்றும் சிகிச்சை முறைகள் என்னென்ன? 3 Functions of a Brain](https://www.jammiscans.in/wp-content/uploads/2023/04/Functions-of-a-Brain-1024x853.jpg)
முதலில் மூளை குறித்து பார்க்கலாம். மூளையை பொறுத்தவரை அதனால் தனித்து செயல்பட முடியாது. அப்படி பார்க்கும் போது மூளைக்குள் எக்கச்சக்கமான நியூரான்கள் இருக்கும். இவை சிறு வயதில் இருந்து நாம் வளர வளர பல்வேறு யூனிட்டுகளாக வளர்ந்துக் கொண்டே இருக்கும். இவைதான் அடிப்படை நரம்பு செல்களை தாங்கி வருகின்றன. இந்த நரம்பு செல்கள்தான் நம்மிடம் இருந்து மூளைக்கும் , மூளையிடம் இருந்து நமக்கும் தகவல்களை கொண்டு சேர்க்கிறது. இதுதான் நார்மல் செயல்பாடு.
சாதாரண தலைவலிக்கும் ஒற்றைத் தலைவலிக்குமான வித்தியாசம்?
பொதுவாக நமக்கு தலைவலி வருவது எப்போது? நாம் சரியாக சாப்பிடாமல் இருக்கும் போது, சரியான தூக்கம் இல்லாமல் இருக்கும் போது அல்லது உடலில் நீரிழப்பு (Dehydration) ஏற்படும் போதுதான் தலைவலி வருகிறது. இது மூன்றுமே தலைவலியை தூண்டி விடக்கூடியது.
தலைவலி வரும்போது அது இந்த நரம்பு செல்களை தூண்டி விடுகிறது. இந்த நியூரான்கள் அல்லது நரம்பு செல் என்பது மூளையின் தண்டு பகுதி. Brain Sterm என்று அழைக்கப்படும் இந்த பகுதி எப்படி பூவுக்கு தண்டு அவசியமோ , அதே போல் மூளைக்கு அவசியம். நீங்கள் சாப்பிடாமல், தூங்காமல் இருக்கும் போது மன அழுத்தம் அதிகரிக்கும் போது இந்த தண்டு பகுதியில் இருக்கும் நரம்பு செல்கள் அதிகமாக மூளைக்குள் சிக்னல் கொடுக்க துவங்கி விடும்.
நமது இரத்தத்தில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போய்க் கொண்டு இருக்கும். அதிகமான சிக்னல் நியூரான் செல்கள் கொடுக்கும் போது இரத்தத்தில் இருக்க கூடிய மெக்னீசியம் அளவு குறையும். இப்படி மரபணு ரீதியான பிரச்சனைகள் அல்லது மைட்டோகாண்ட்ரியா போன்ற பல்வேறு காரணங்களால் கூட இந்த நியூரான் மற்றும் நரம்பு செல்கள் செயல்படுத்த படலாம்.
தலையில் இருக்க கூடிய நரம்பு செல்களுக்கு பெயர் TRIGEMINAL NERVE என்று அழைக்கப்படுகிறது. இதுதான் தலைக்குள் முகம், மூக்கு, காது, கண், வாய் ஆகிய பகுதிகளுக்கும் மூளைக்கும் தூதுவராக இருக்கிறது. இந்த நரம்பு செல்கள் செயல்பட துவங்கும்போது இந்த ட்ரைஜெமினல் நரம்புகளும் செயல்பட தொடங்குகிறது.
மேல்சொன்னபடி கண் இருட்டுதல், மயக்கம், வாய் குளறுதல் போன்ற அறிகுறிகள் இதனால் தான் ஏற்படுகிறது. இதற்கு பெயர்தான் AURA என்று சொல்கிறோம். அதாவது, ஒரு பிரச்சினை வருவதற்கு முன்கூட்டியே அறிகுறிகள் மூலம் தெரிந்துக் கொள்வது. இந்த அறிகுறிகள் எல்லாமே நம் ட்ரைஜெமினல் நரம்பு பாதிக்கப்படும் போதுதான் வருகிறது. அதைத்தான் நாம் ஒற்றை தலைவலி என்று சொல்கிறோம்.
இந்தளவிற்கு தலைவலி வருவதற்கான காரணம் என்ன? (Headache Causes)
கார்டெக்ஸ் (CORTEX) என்பதுதான் மூளையில் உள்ள முக்கியமான பகுதி. இந்த பகுதியில் இரத்தம் ஓடி கொண்டே இருக்கும். அப்போது இந்த நரம்பு செல்கள் செயல்பாட்டை துவங்கியவுடன் கார்டெக்ஸ் பகுதியில் இடி மின்னல் போல் ஏற்படும். அப்போது இரத்த ஓட்டமும் அதிகரித்து அந்த இரத்த குழாய் வேகமாக சுருங்கி விரிய துவங்கும். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த இரத்தக் குழாய்கள் முழுமையாக சுருங்கி அந்த பகுதிக்கு ஆக்சிஜன் முழுமையாக செல்லாமல் நமக்கு கடுமையான தலைவலி ஏற்பட துவங்கி விடும்.
முன்பே சொன்னது போல் நியூரான்கள் செயல்பட துவங்கியவுடன் இந்த பிரைன் ஸ்டெம் அமைதியாக இருக்காது. அதுவும் செயல்பட துவங்கி விடும். அப்போது நியூரோ பெப்டைட்ஸ் ஹார்மோன்களை வெளிவிட துவங்கி விடும். குறிப்பாக செரட்டோனின் (SEROTONIN) , நார்அட்ரினலின் (NORADRENALINE) , ப்ராஸ்டோகிளாண்டின்ஸ் (PROSTAGLANDINS) ஆகிய ஹார்மோன்களை வெளியேற்றும்.
நமது உடலுக்கு ஆடை போல, மூளையை சுற்றியும் ஒரு லேயர் உள்ளது. அதன் பெயர்தான் MENINGES. முன்னால் சொன்ன ஹார்மோன்கள் வெளியாகும் போது இவை இந்த லேயரின் மீது படிந்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இரத்த ஓட்டம் அதிகரிக்க அதிகரிக்க இது மூளையில் வீக்கத்தை அதிகரித்து மேலும் தலைவலியை அதிகரிக்கும். இதே சமயத்தில் ட்ரைஜெமினல் நரம்பு செல்களும் பாதிக்கப்பட்டு தலையின் ஒரு பகுதி அல்லது பக்கத்தில் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்.
தலைவலியின் வகைகள்..
தலைவலியில் பல்வேறு வகைகளும் கூட உண்டு. அதன் விதங்களை பார்க்கலாம்.
![தலைவலி வர காரணம், மற்றும் சிகிச்சை முறைகள் என்னென்ன? 4 Types of Headache](https://www.jammiscans.in/wp-content/uploads/2023/04/Types-of-Headache-1024x853.jpg)
ஆக்யூலர் (OCULAR)
கண் சார்ந்து வருவதுதான் இந்த ஆக்யூலர் தலைவலி. கண்களில் வெளிச்சம் போல் தெரிதல், கரும்புள்ளிகள் தெரிதல் ஆகியவை ஏற்படுதல் இந்த வகை தலைவலிதான்.
ஹெமிப்ளெஜிக் (HEMIPLEGIC)
ஹெமிப்ளெஜிக்கை பெராலிசிஸ் என்று சொல்வார்கள் . இது ஏற்படும்போது தலைவலியோடு சேர்ந்து ஒரு பக்கம் உடல் பாகங்கள் முழுவதும் செயலிழந்து போகலாம்.
மாதவிடாய் (MENSTRUAL)
சிலருக்கு மாதவிடாய் வருவதற்கு முன்பும் கூட சிலருக்கு ஒற்றை தலைவலி ஏற்படலாம்.
ஆரா (AURA)
இதுதான் அதிகமாக பலருக்கும் வரக்கூடிய பொதுவான தலைவலி. இது ஏற்படும்போது தான் பலரும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை எதிர்கொள்கிறார்கள்.
தலைவலியின் நிலைகள் (stages)
எப்படி பல வகை தலைவலி இருக்கிறதோ அதேபோல் தலைவலி வருவதற்கு முன்பு பின்பு என சில ஸ்டேஜ்களும் உண்டு. முதலில் தலைவலி வருவதற்கு முன்பே Prodromal என்ற ஸ்டேஜ் உள்ளது. இரண்டாவது உங்களுக்கு தலைவலி வந்துவிட்டதன் அறிகுறியாக AURA என்ற ஸ்டேஜ் வரும்.
மூன்றாவதாக DROMAL ஸ்டேஜ் என்பது உங்கள் முகத்தில் தலைவலி ஏற்படும் ஸ்டேஜ். இதற்கு பிறகு நான்காவது மற்றும் இறுதி ஸ்டேஜாக வரும் POSTDROMAL ஸ்டேஜ்தான் கொஞ்சம் தலைவலி சரியாகும் நிலை. இவைதான் தலைவலியின் நான்கு நிலைகள்.
இதுவரை தலைவலி வருவதற்கான காரணம் (Headache Causes) குறிப்பிட்ட ஒன்றுதான் என்று கண்டுபிடிக்கபடவில்லை. ஆனால், முன்பே சொன்னது போல் ட்ரைஜெமினல் நரம்பு செல்கள் செயல்பட தொடங்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் தான் தலைவலி ஏற்படுவதாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இந்த தலைவலி உண்டாவதால் அன்றாட வேலைகளை கூட செய்ய தோன்றுவதில்லை. இந்த தலைவலியை வராமல் தடுக்க முடியுமா, அதற்கு என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தலைவலி வராமல் தடுப்பது எப்படி?
மாதவிடாய் சுழற்சியில் ஈஸ்ட்ரோஜன் அளவு மாறிமாறி அதிகரிப்பதும் குறைவதும் என்று இருக்கும். இதுவும் கூட தலைவலியை தூண்டி விடும் காரணமாக இருக்கலாம். அதையும் தாண்டி இந்த சுழற்சியை சீராக்குவதற்காக சில மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது. அதனால் கூட சில பேருக்கு தலைவலி வருவதுண்டு.
![தலைவலி வர காரணம், மற்றும் சிகிச்சை முறைகள் என்னென்ன? 5 Tips for Avoiding Migraine](https://www.jammiscans.in/wp-content/uploads/2023/04/Tips-for-Avoiding-Migraine-1024x853.jpg)
அதே போல் உணவு பழக்கம், மன அழுத்தம், நீரிழப்பு ஆகிய மூன்று விஷயங்களும் உங்கள் தலைவலிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. எனவே அடிக்கடி தலைவலி பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் முறையான 8 மணி நேர தூக்கம், சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுதல், நீரிழப்பு ஏற்படாமல் அதிக தண்ணீர் குடித்தல் போன்றவற்றை பின்பற்றினாலே தலைவலி நின்றுவிடும்.
இதுமட்டுமின்றி ஜங்க் உணவுகள் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கும் தலைவலி ஏற்படும் (Headache Causes). காரணம் இந்த உணவுகளில் காணப்படும் MSG -Monosodium Glutam என்ற பொருள் இந்த தலைவலியை தூண்டும் காரணியாக உள்ளது. எனவே ஜங்க் உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.
தண்ணீர் குடிப்பதை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 6 முதல் 8 டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். இதை பிரித்துக் கொள்ளுங்கள். காலை உணவுக்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பின் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் குடித்துக் கொள்ளுங்கள். இதே போல் மதிய மற்றும் இரவு உணவுக்கு முன்பும் பின்பும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள். இதிலேயே ஆறு டம்ளர் தண்ணீர் ஒரு நாளுக்கு குடித்து விடுவீர்கள். இதில் ஒன்று இரண்டு டம்ளர் இடையில் நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
மன அழுத்தத்தை குறைக்க யோகா போன்ற உத்திகளை பின்பற்றுங்கள். நன்றாக ஆழ்ந்த தூக்கம் மிக அவசியம். உணவு, தண்ணீர் ஆகியவற்றை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல், எலக்ட்ரானிக் பொருள்கள் பயன்பாட்டையும் குறைப்பது நல்லது. இதிலிருந்து வரும் ஒளி கூட தலைவலியை உண்டு செய்யலாம்.
இதையும் தாண்டி உங்களுக்கு தீராத தலைவலியை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அவர்கள் சொல்லும் பரிசோதனைகளை செய்து சிகிச்சை செய்து கொள்வது தலைவலி அவஸ்தையை குறைக்க செய்யும்.