கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் குறைந்தால் உண்டாகும் அறிகுறிகள் என்ன எப்படி அதிகரிப்பது?

CWC
CWC
5 Min Read

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு பிரச்சனை

கர்ப்பிணி சந்திக்கும் பொதுவான ஆனால் முக்கியமான பிரச்சனை கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு (Hemoglobin Low When Pregnant in Tamil). கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாடு தொடர்புடைய இரத்த சோகை பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.

உடலின் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை எடுத்து செல்ல ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் பற்றாக்குறையாகும் நிலையில் இரத்த சோகை பிரச்சனை எதிர்கொள்வார்கள். இந்த பதிவில் கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு அறிகுறிகள் மற்றும் ஹீமோகுளோபின் அதிகரிக்க என்ன செய்யலாம் என்பது குறித்தும் பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவின் வளர்ச்சிக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் தாயிடமிருந்து தான் பெறுகிறது. தாய்க்கு உண்டாகும் குறைபாடுகள் கருவையும் கருவின் வளர்ச்சியையும் பாதிக்க செய்கிறது. பெரும்பாலும் குறைபாடுகள் அறிகுறிகள் உடல் காட்டினாலும் கர்ப்பகால அறிகுறிகள் என்று பெண்கள் நினைத்து விடுகிறார்கள். அப்படியானவற்றில் ஒன்று ஹீமோகுளோபின் அளவு குறைவது.

கர்ப்பிணியின் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அது தீவிரமாகும் வரை கவனிக்காவிட்டால் அது கர்ப்பிணி பெண் வயிற்றில் வளரும் சிசு இருவரையுமே பாதிக்கிறது.

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் ஏன் முக்கியம் என்று சொல்கிறார்கள்?

உடலில் இருக்கும் சிக்கலான புரதமே ஹீமோகுளோபின் என்று சொல்லப்படுகிறது. உடலில் ஆக்ஸிஜன் மற்றும் கார்பண்டை- ஆக்ஸைடு இரண்டையும் உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்து செல்ல இவை உதவுகிறது. உடலில் இரத்த சிவப்பு அணுக்களுக்கு தேவையான இந்த ஹீமோகுளோபின் கர்ப்பிணிக்கு இயல்பாகவே குறையக்கூடும். அதனால் தான் கர்ப்பிணிகள் நிறைவான ஊட்டச்சத்தை எடுத்துகொள்ள வலியுறுத்துகிறார்கள்.

இந்த ஹீமோகுளோபின் அளவு பெண்ணுக்கு 12 முதல் 16 கிராம் வரை இருக்க வேண்டும். இது வெகுவாக குறையும் போது என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு (Hemoglobin Low When Pregnant in Tamil) அறிகுறிகள்

அதிக சோர்வாக உணர்வார்கள்

கர்ப்பிணிகள் கருவுற்ற நாள் முதல் மூன்று மாத காலம் வரை சோர்வை உணர்வார்கள். பிறகு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவார்கள். அதோடு உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களும் உடலில் சோர்வை உண்டாக்கும். எனினும் அதிகப்படியான சோர்வை எப்போதும் உணர்வது வழக்கமான அவர்களது வேலையை கூட செய்ய முடியாமல் போவது, உடல் பலவீனமாக இருப்பது என எல்லாமே கர்ப்ப அறிகுறிகளை தாண்டியது என்பதால் அதிகமாக கர்ப்ப காலத்தில் உடல் சோர்வு இருந்தால் அதற்கான காரணத்தை மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

தோல் நிறம் மாறலாம்

இந்த ஹீமோகுளோபின் உடலில் அதிகமாக குறையும் போது தோலின் நிறம் வெளுக்க கூடும். கண்களில் வெளுப்பு அதிகமாக தெரியும். கண்களின் இரப்பையை இழுத்து பார்த்தால் வெளுப்பு அதிகமாக இருக்கும். நாக்கும் வெளிர் மஞ்சள் போன்று வெளுத்திருக்கும். அதோடு சிலருக்கு கை, காலிரல் நகங்கள் உடையக்கூடும். இந்த அறிகுறிகளை உற்று கவனித்து மருத்துவரிடம் சொன்னால் அவரே கண்டறிவார்.

மூச்சு விடுவதற்கு சிரமப்படலாம்

கர்ப்பிணிக்கு கருவின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க கருப்பை விரிவடைவதால் மூச்சு வாங்குதல் இயல்பாக இருக்கும். ஆனால் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டம் முதல் மூச்சு வாங்குதல், வேகமான மூச்சு போன்றவை ஹீமோகுளோபின் குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும். கர்ப்பிணி பெண் சாதாரணமாக நடக்கும் போது, எழும் போது உட்காரும் போது மூச்சு வாங்குதலை சந்தித்தால் அதை மருத்துவரிடம் கலந்து ஆலோசியுங்கள்.

ஏற்ற இறக்கமான இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு எப்போதுமே கர்ப்பிணிகளுக்கு வேகமாக இருக்கும் என்று சிலர் நம்புவதுண்டு. சில பெண்கள் இதய துடிப்பின் வேகத்தை உணர முடியும். கொஞ்சம் அதிகமான வேலை பளு தூக்கும் போது இயல்பாக எல்லோருக்கும் வரக்கூடியது தான். ஆனால் கர்ப்பிணி பெண் எந்த வேலையையும் செய்யாமல் இயல்பாக ஓய்வாக இருக்கும் போது இதயத்துடிப்பின் வேகத்தை உணர்ந்தால் அது ஹீமோகுளோபின் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.

தலைவலி

கர்ப்பிணி பெண்ணுக்கு அடிக்கடி தலைவலி என்பது கவனிக்க வேண்டிய விஷயம். ஏனெனில் உடலில் ஆக்ஸிஜன் அளவு பற்றாக்குறையாகும் போது மூளைக்கு போதுமான இரத்த ஓட்டம் செல்வதில்லை. அதனால் அவ்வபோது தலைவலியை எதிர்கொள்வார்கள். அடிக்கடி தலைவலி இருந்தால் மருத்துவ பரிசோதனையில் இது குறித்து அவசியம் மருத்துவரிடம் பேச வேண்டும்.

அதிக குளிரை உணர்வது

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கும் கர்ப்பிணிகள் இந்த அறிகுறியை சுலபமாக அடையாளம் காண முடியும். கோடையாக இருந்தாலும், சாதாரண அறைவெப்பநிலையாக இருந்தாலும் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் குளிர்ச்சியாக இருந்தால் தொடர்ந்து கவனியுங்கள்.

ஏனெனில் அடுத்த அறிகுறியாக உடலில் நடுக்கம் உண்டாக கூடும். இது குளிர்காய்ச்சல், சிறுநீரக தொற்று காய்ச்சல் என்று நினையாமல் ஹீமோகுளோபினுடன் பொருத்தி பாருங்கள். சரி இந்த ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள்

பழங்கள்

பழங்களில் உலர் திராட்சை இரும்புச்சத்து நிறைந்தது சிற்றுண்டியாக் ஒரு கைப்பிடி இதை சேர்க்கலாம். அதே போன்று பேரீச்சை பழமும் இரும்புச்சத்து நிறைந்தவை. கர்ப்பிணிகள் தினமும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் பற்றாக்குறை இல்லாமல் செய்யலாம். மாதுளையை சாறாக்கி குடிப்பதை காட்டிலும் காலை உணவுக்கு பிறகு இந்த பழத்தை சாப்பிடலாம்.

கோடைக்காலமாக இருந்தால் தர்பூசணி சேர்க்கலாம். வெயில் காலத்துக்கு ஏற்ற பழம். இதிலும் இரும்புச்சத்து உண்டு. உலர் பழங்களில் அத்திப்பழமும் உதவக்கூடும். தினமும் இரண்டு அத்திப்பழம் சாப்பிடுவதன் மூலம் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம். ஏழைகளுக்கேற்ற கொய்யா பழமும் இரும்புச்சத்து கொண்டவை.

ஆப்பிள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் பப்பாளிம் ஆரஞ்சு , எலுமிச்சை ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றையும் சேர்க்கலாம். இந்த பழங்களில் ஒன்றை தினசரி சாப்பிடும் வழக்கத்தை கொண்டாலே போதும். அதே போன்று பழங்களை சேர்த்து சாப்பிட கூடாது.

மேலும் தெரிந்து கொள்ள: கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

கீரைகள்

கீரைகள் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவில் முதன்மையானவை. ஊட்டச்சத்து மிக்க உணவு என்றால் அதில் கீரைகளும் அவசியம் இடம் பெற வேண்டும். கீரைகளில் முருங்கைக்கீரை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். இதை வாரத்தில் மூன்று நாட்கள் வரை சேர்க்கலாம். அதே போன்று பொன்னாங்கண்ணி கீரையும் புதிய இரத்த உற்பத்திக்கு உதவக்கூடும். புதினா, அரைக்கீரை போன்றவற்றையும் சேர்க்கலாம்.

காய்கறிகள்

காய்கறிகளில் பீட்ரூட் அதிகமாக சொல்லப்படுகிறது. இரும்புச்சத்தும், ஃபோலிக் அமிலம் வளமாக இதில் உள்ளது. வேர்க்கடலை ஒவ்வாமை இல்லாதவர்கள் வேர்க்கடலையை சாப்பிடலாம்.

அசைவம் சாப்பிடுபவர்கள்

கர்ப்பிணி அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் முட்டை, ஈரல், மண்ணீரல் போன்றவற்றை சாப்பிடலாம்.

கொட்டைகள்

கர்ப்பிணிகள் தினமும் 5 பாதாமை ஊறவைத்து தோல் உரித்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க செய்யும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

உடற்பயிற்சி

உணவின் மூலம் ஹீமோகுளோபினை அதிகரிப்பது போன்று மென்மையான சில கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்க செய்யும். மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணருடன் கலந்தாலோசித்து உடலுக்கேற்ற உடற்பயிற்சி செய்திடுங்கள்.

5/5 - (102 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »